Sunday, December 16, 2018






திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன்  பிச்சி அம்மா, முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தார்.

ஆண்டவன் பிச்சி - இவ்விளம்பர யுகத்தில் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ‘ஆண்டவன் பிச்சி’ என்று மகா பெரியவாளால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மரகதவல்லி அம்மாள்.

(ஆண்டவன் பிச்சை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு) இரண்டு வயதிலேயே தாயை இழந்து, படிப்பு, பாட்டு ஏன் விளையாட்டிலும்கூட நாட்டமில்லாதிருந்த எட்டு வயது மரகதத்திற்குக் குடும்பத்தினர் திருமணம் செய்வித்துப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தைவழிப் பாட்டி சுந்தரி அம்மாள் மட்டும் “இப்பெண்ணிற்கு நல்ல அறிவைக் கொடுப்பாயாக’’ என்று இடைவிடாமல் முருகனை வேண்டிக் கொண்டிருந்தார்.

பத்து வயதிருக்கும்போது, பிறந்த வீட்டிற்கு வந்திருந்த மரகதத்தின் வாழ்க்கையைத் திசை மாற்றிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முருகப் பெருமான், குழந்தை மரகதத்தின் கனவில் தோன்றி, ஆடும் பரிவேல், அணி சேவலுடன் வந்து அவள் நாவில் பிரணவத்தைப் பொறித்தான். பள்ளிக்கே சென்றிராத, படிப்பறிவு சிறிதுமில்லாத மரகதத்தின் வாக்கில், மடை திறந்த வெள்ளம்போல் பக்திப் பாடல்கள் பெருக்கெடுத்தன. ஷடாக்ஷர மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, எப்போதும் ஜபம் செய்யும் படிக் கூறி மறைந்தான் முருகன்.

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானாள் மரகதம். ஐந்தாவது பிரசவம் மிகக் கடுமையாக இருந்தது. கந்த சஷ்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கந்த சஷ்டி நாளன்று மாலை, வீட்டிலிருந்த மற்றவர்கள் சூரசம்ஹார விழாவைக் காணச் சென்று விட்டனர். இரவு ஜுர வேகத்தில் அரற்றிக் கொண்டிருந்த மரகதத்திற்கு ஒரு கனா வந்தது. அதீத அழகுடன் தோன்றிய முருகன் ஒன்றரை வயதுக் குழந்தையாய் மரகதத்திடம் வந்து ‘என்னை எடுத்துக் கொள்’ என்று கெஞ்சினான்.

வாரி அணைத்துக் கொண்ட மரகதம் ‘நீ யார்’ என்றதும் ‘மால் மருகன்’ என்றான் குழந்தை. ‘எனக்கு ஒரு தாலாட்டுப் பாடேன்’ என்று குழந்தை கூறியதுதான் தாமதம், ஆனந்த சாகரத்தில் மூழ்கிய மரகதம், இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை முருகன் மேல் பாடினாள். பிரசவ அறையில் உதவிக்கிருந்த பெண் ஓடிச்சென்று பென்சிலும் காகிதமும் கொண்டு வந்து அப்படியே அவற்றை எழுதி எடுத்துக் கொண்டாள்.

உணர்ச்சி வசப்பட்டு மரகதம் நடுநிசியில் உரக்கப் பாடியது மாமியார் செவிக்கு எட்டியது. கோபத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தவர், இரண்டுநாளே ஆன குழந்தை அழுது கொண்டிருந்த¬
தக்கூட கவனிக்காமல் பாடிக் கொண்டிருந்த மருமகளைக் கண்டு ‘குழந்தை அழுறதுகூடத் தெரியாமல் அப்படி என்ன பாட்டு, ஆண்டிமேல்! ஆண்டியைப் பாடும் உன்னால் இந்தக் குடும்பமே பிச்சை எடுக்கப் போகிறது.

இனிமேல் முருகனைப் பற்றிப் பாடவோ எழுதவோ ஏன் பேசவோகூட மாட்டேன் என்று உன் கணவர், குழந்தைகள் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்’’ என்று கோபத்துடன் கூறியதும் பயந்துபோன மரகதம் அப்படியே செய்தாள். அதே வேகத்துடன் மாமியார், அப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தை ஒரு பெட்டியில் போட்டுப் பெரிய பூட்டையும் மாட்டி விட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் 24 வருடங்கள் ஓடிய பின்னரே மரகதத்தின் மாமியார் இறைவனடி சேர்ந்தார். இவ்வளவு காலமும், மனது துடித்த போதிலும் மரகதம் வாய் திறந்து முருகனைப் பற்றி பேசவோ, வாய் திறந்து பாடவோ செய்யவில்லை. ஆனால், இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. உறவுப் பெண்மணி ஒருவர் வந்து தான் நடத்தும் பத்திரிகைக்கு ஒரு பாட்டு எழுதித் தருமாறு மரகதத்திடம் கேட்டார்.

“நான் பாடியே எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டனவே’’ என்று கூறிய மரகதம்மாள், மாமியார் பூட்டி வைத்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே பெரும் அதிசயம் காத்திருந்தது. ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாமியார் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரித்துப்போயிருந்தன. ஆனால், ஆண்டியின் மேல் மரகதம்மாள் பாடிய பாடல்கள் அடங்கிய புத்தகம் மட்டும் அப்படியே இருந்தது!

1949 ஜனவரி 21. விடியற்காலையில் அம்மா அருகில் குழந்தையாகத் தோன்றினான் முருகன். “எல்லாப் பாடல்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டாயே! மீண்டும் என்மேல் பாட ஆரம்பி.’’ என்றான்.

கணவர் மீதும் குழந்தைகள் மீதும் ஆணையிட்டிருந்தபடியால் அவர்களுக்கு ஏதும் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் மரகதம். “பேனாவைப் பிடித்திருப்பது உன் கை; எழுதுவது என் செயல்’’ என்று கூறி மறைந்தான் முருகன். அன்று அவன் எடுத்துக்கொடுத்த அடியை வைத்து “அருணோதய சூர்யபிம்பமதுபோல் முகமும்“ என்று துவங்கி 108 பாடல்களை எழுதினார் மரகதம்மாள். அதுவே ‘ஆத்ம போதம்’ என்ற பாடல் தொகுப்பாக வெளிவந்தது.

உள்ளம் உருகுதய்யா...

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா

பாசம் அகன்றதய்யா - பந்த
பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே - எந்தன்
ஈனம் மறைந்ததப்பா

ஆறுத் திருமுகமும் - உன் அருளை
வாரி வழங்குதய்யா
வீரமிகுந்தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா

கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் - எனக்குன்
பதமலர் தருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

******************************************************************

“உள்ளம் உருகுதய்யா ..!”

-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,
 உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
 ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

 பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”

 வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.
 எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

 பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!

 ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
 .
 பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
 கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .
காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :
 “உள்ளம் உருகுதடா...”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.
அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !

 யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?
 டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.
 பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .
 பள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

 ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..

 சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
 .
 அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!

 அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.
சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?

டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?

# இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில்  எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை.
 கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.

“பாசம் அகன்றதய்யா - பந்த
 பாசம் அகன்றதய்யா
 உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
 ஈசன் திருமகனே
 எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா !”

இவர்தான் அந்தப் பாடலை எழுதிய ஆண்டவன் பிச்சி அம்மாள்

No comments:

Post a Comment

ரக்க்ஷீதாவின் பொக்கிஷங்கள்